Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


உறையூர் அருள்மிகு செல்லாண்டி அம்மன் ஆலயம்

View previous topic View next topic Go down

உறையூர் அருள்மிகு செல்லாண்டி அம்மன் ஆலயம்

Post  birundha on Sun Mar 31, 2013 3:10 pm

ஆலயங்களில் இறைவியின் திருவுருவை முழுமையாக தரிசனம் செய்வதே அனைவருக்கும் பழக்கம். ஆனால் ஒரு அம்மனை மூன்று பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் வெவ்வேறு ஊர்களில் ஆலயம் அமைத்து வழிபடுவதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அன்னையை மூன்று பகுதிகளாகப் பிரித்து முதல் பகுதியான தலைக்கு மதுரை சிம்மக்கல்லில் ஒரு ஆலயமும், இரண்டாவது பகுதியான உடலுக்கு கரூர் அருகே உள்ள நொய்யலில் ஒரு ஆலயமும் அமைந்துள்ளது. தலையும் உடலும் இல்லாத வெறும் கால் பாதங்கள் மட்டுமே கொண்ட அம்மனின் மூன்றாவது பகுதி உள்ள இடம்தான் திருச்சி அருகே உள்ள உறையூர் அருள்மிகு செல்லாண்டி அம்மன் ஆலயம்.

இதன் தல வரலாறு என்ன?

சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்நாட்டை ஆண்ட சேர சோழ பாண்டிய மன்னர்களிடையே ஒற்றுமையே இல்லாமல் இருந்தது. எந்த நேரமும் போர் மூளலாம் என மக்கள் பயந்து கொண்டேயிருந்தனர். அவர்கள் பயந்தபடி இந்த மன்னர்களிடையே அடிக்கடி போர் மூண்டது. பல ஆயிரமாயிரம் மக்கள் உயிரிழந்தனர்.

பல்லாயிரக் கணக்கான மக்கள் காயமடைந்தனர். இந்த வேதனைக்கு முடிவே கிடையாதா? மூன்று மன்னர்களின் மனதில் இந்த வினா மெல்ல துளிர்விட்டது. ஆனால் விடைதான் கண்டுபிடிக்க இயலவில்லை. வினாவுக்கு விடை கிடைக்கும் முன்பாக மறுபடியும் போர் மூண்டது. ஒரு வயதான மூதாட்டி போர்க்களம் வந்தாள்.

மூன்று மன்னர்களையும் தனித்தனியாக சந்தித்தாள். 'உங்களது மண் ஆசை, பொன் ஆசையால் இப்படி ஒற்றுமை இல்லாமல் இருக்கிறீர்களே! உங்களது தகாத ஆசையால் எவ்வளவு உயிர்கள் மாள்கின்றன. எவ்வளவு பேர் காயமடைகிறார்கள்? ஏன் நீங்கள் ஒற்றுமையாக இருந்து மக்களை வாழ வைக்கக் கூடாது?' என்று கேட்ட மூதாட்டி உடனே மறைந்து போனாள். மூன்று மன்னர்களும் ஒன்று கூடினர்.

தங்களிடம் வந்த அந்த மூதாட்டி யார் என விவாதித்தனர். விடை கிடைக்கவில்லை. பின்னர் ஒரு நாள் கோவை அருகே உள்ள மதுக்கரை என்ற ஊரில் அருள்பாலிக்கும் அன்னை பார்வதி தேவி மூன்று மன்னர்களுக்கும் தனித்தனியே காட்சி தந்தாள். சிறிது நேரத்தில் அன்னை பார்வதி தேவியின் உருவம் மூதாட்டியாக மாறியது.

மன்னர்களுக்கு உண்மை புரியத் தொடங்கியது. தங்களிடம் மூதாட்டியாக வந்தது அன்னை பார்வதி தேவி தான் என்ற உண்மையை உணர்ந்தனர் மன்னர்கள். அன்னை காட்சி தந்த இடத்தில் ஆலயம் அமைத்து இன்றைக்கு செல்லாண்டி அம்மன் எனப் பெயரிட்டு வணங்கி மன்னரும் மக்களும் வழிபடத் தொடங்கினர்.

பகை ஏதும் இன்றி யாவரும் ஒற்றுமையுடன் வாழ அன்னை அருள்பாலிக்க வேண்டுமென மக்கள் பிரார்த்தனை செய்ய அன்னை செல்லாண்டியம்மனும் அதை ஏற்றுக் கொண்டாள். அன்னையே சேர, சோழ, பாண்டிய மன்னர்களுக்கு அவர்களுக்கு உரிய எல்லையை பிரித்து கொடுக்க உதவியதாகவும், அப்போது மூன்று மன்னர்களும் அம்பிகையிடம் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருந்து தங்களுக்கு அருளும்படியும் வேண்டிக் கொண்டனராம்.

அதனால், அன்னை தன்னையே மூன்று பகுதிகளாக பகுத்துக் கொடுத்து மூன்று இடங்களில் அருள்பாலித்து மக்களின் நலம் காத்து வருகிறாள் என தலபுராணம் கூறுகிறது. அன்னை தனது மூன்றாவது பகுதியான கால் பகுதியாக உறையூரில் உள்ள அருள்மிகு செல்லாண்டியம்மன் ஆலயத்தில் மூலவராய் அருள்பாலித்து வருகிறாள்.

கருவறையில் அன்னையின் முழு உருவம் கிடையாது. இடுப்பிற்கு கீழ் உள்ள பகுதி மட்டுமே இருக்கிறது. மூன்று மாமன்னர்களின் வேண்டுகோள்படி அவர்களுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தங்கிய அன்னை செல்லாண்டியம்மன் இங்கு உறையூரில் சோழ மன்னனுக்கு பாத தரிசனம் காட்டினாராம்.

இவளிடம் உள்ள சூலம் ஒரு அசுரனை வதம் செய்தபடி காட்சி தருகிறது. அபிஷேகத்தின் போது மட்டுமே இந்த அமைப்பை காண முடியும். மற்ற நேரங்களில் இந்த உருவத்திற்கு உடல், தலை ஆகியவை இருப்பது போல் அலங்காரம் செய்து விடுகின்றனர். இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

அழகிய முகப்பை தாண்டினால் அகன்ற பிரகாரம். அடுத்து உள்ளது மகாமண்டபம். மகா மண்டபத்தின் தென்புறம் ஸ்ரீஆரியப்பூ ராஜா, காத்தவராயன் சன்னதிகளும், வடபுறம் கருப்பண்ணசாமி, மதுரை வீரன் சன்னதிகளும் உள்ளன. அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவாயிலில் இடதுபுறம் விநாயரும், வலது புறம் முருகன், வள்ளி, தெய்வானை திருமேனிகளும் அருள்பாலிக்கின்றன.

முகப்பில் கம்பீரமான இரு துவார பாலகிகளின் சுதை வடிவத் திருமேனிகளை அடுத்து அர்த்த மண்டபமும் தொடர்ந்து கருவறையும் உள்ளன. கருவறையில் அன்னையின் அலங்கரிக்கப்பட்ட திருமேனியை நாம் கண் குளிர தரிசிக்கலாம். அன்னையின் அலங்கார திருமேனிக்கு பின்புறம் அன்னையின் முழு உருவச் சிலை ஒன்றும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இது பிற்காலத்தில் வடிவமைக்கப்பட்டது. பிரகாரத்தின் தென் கிழக்கு மூலையில் பல நூற்றாண்டுகளைக் கடந்த அரச மரமும் வேம்பும் இணைந்த தல விருட்சங்கள் உள்ளன. விருட்சத்தின் அடியில் வலம்புரி விநாயகர், நாகர் திருமேனிகள் உள்ளன. பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் சாம்பச மூர்த்தி சிலை உள்ளது.

சித்திரை மாதம் அன்னைக்கு 8 நாட்கள் 'காளி ஓட்டத் திருவிழா' என்ற திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இங்கு அம்மனுக்கு உற்சவ விக்ரகம் இல்லை. அதனால், பனை ஓலையினால் செய்யப்பட்ட அன்னையின் உருவத்தை கோவிலுக்கு சற்றே தொலைவில் உள்ள ஒரு திடலுக்கு கொண்டு செல்கின்றனர். அங்கு அன்னைக்கு 5 நாட்கள் சிறப்பான பூஜைகள் நடை பெறுகின்றன.

ஆறாம் நாள் அன்னையை மீண்டும் கோவிலுக்கு கொண்டு வருகின்றனர். ஆரம்ப காலத்தில் அன்னையை கோவிலிருந்து திடலுக்கு தூக்கிக் கொண்டு ஓடும் வழக்கம் இருந்ததாம். அதனால் தான் இவ்விழா 'காளிஓட்டத் திருவிழா' என அழைக்கப்பட்டது. இப்போது அந்தப் பழக்கம் நடை முறையில் இல்லை.

ஒவ்வொரு மாத பவுர்ணமி அன்றும் அன்னைக்கு நவதானிய அபிஷேகமும், அன்னாபிஷேகமும் நடைபெறும். பின்னர் இவைகளை ஆற்றில் கொண்டு போய் மீன்களுக்கு உணவாக விடுகின்றனர். இந்த அன்னாபிஷேகத்தில் உபயோகப்படுத்தும் அன்னத்தின் ஒரு பகுதியை உருண்டையாக்குகின்றனர்.

குழந்தை வேண்டி வேண்டும் பெண்களுக்கும், திருமணம் நடைபெற வேண்டி வேண்டும் பெண்களுக்கும் இந்த அன்ன உருண்டையை பிரசாதமாகத் தர அவர்கள் வேண்டுதல் நிறைவேறுவது நிஜம் என்கின்றனர் பக்தர்கள். மாத பவுர்ணமிகள், அனைத்து வெள்ளிக் கிழமைகள், மாத அமாவாசைகள், நவராத்திரி, பொங்கல் ஆகிய நாட்களில் அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன்.

ஆடிப்பூசத்தில் அன்னைக்கு ஆயிரக்கணக்கான வளையல்களைக் கொண்டு வளையல் அலங்காரமும், ஆனி மாத கடைசி வெள்ளியன்று அன்னைக்கு காய்கறி அலங்காரமும் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர்.

இந்த ஆலயம் காலை 6 முதல் 11.30 மணி வரையிலும் மாலை 4.30 முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

இரவு நேரங்களில் கோவில் அருகே அன்னை நடமாடுவதாகவும், அவள் நடந்து வரும் கொலுசின் ஓசை கோவிலின் உள்ளேயும் வெளியேயும் நிறைய முறை கேட்பதாக சுற்றிலும் குடியிருக்கும் மக்கள் சிலிர்ப்போடு கூறுகின்றனர். மூவேந்தர்களுக்காக தன்னையே மூன்று பாகங்களாக பிரித்துக் கொண்டு மூன்று நாடுகளில் தங்கி அருள்புரிபவள் இந்த செல்லாண்டி அம்மன்.

எனவே, இந்த அன்னை தன்னை நாடி வரும் பக்தர்களுக்காக, அவர்கள் மனம் வருந்தாமல் அவர்கள் நினைத்ததை நிறைவேற்றி தருவதில் வல்லவள் என்று பக்தர்கள் நம்புவது நிஜமே!

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள உறையூரில் உள்ளது இந்த அன்னை செல்லாண்டி அம்மன் ஆலயம்.
avatar
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum