Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


பித்ரு தோஷம் போக்கும் சாமவேதீஸ்வரர் கோவில்

View previous topic View next topic Go down

பித்ரு தோஷம் போக்கும் சாமவேதீஸ்வரர் கோவில்

Post  birundha on Sun Mar 31, 2013 3:17 pm

ஒரு கோவிலுக்கு சில சிறப்புகள் இருக்கலாம். ஆனால் சிறப்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரு கோவில் உள்ளது என்றால் அதன் பெருமையை எப்படி சொல்வது?. அப்படிப்பட்ட பல்வேறு பெருமைகளை கொண்ட ஒரு கோவில் திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருமங்கலம் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.

சாமவேதீஸ்வரர் கோவில்.......... அந்த கோவிலின் பெயர் உலகநாயகி உடனுறை சாமவேதீஸ்வரர் திருக்கோவில். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றிலும் சிறப்பு வாய்ந்தது இத்தலம். லட்சுமிதேவி, குபேரன், இந்திரன், சியவன முனிவர், உதங்க முனிவர் ஆகியோர் பூஜித்து பேறு பெற்ற தலம். 'திரு' என்று அழைக்கப்படும் லட்சுமிதேவி இங்குள்ள சாமவேதீஸ்வரரை வழிபட்டு மங்கலம் பெற்றதால் இந்த தலம் 'திருமங்கலம்' என்று அழைக்கப்படுகிறது.

இந்த கோவிலில் உள்ள இறைவனின் பெயர் சாமவேதீஸ்வரர். இறைவியின் பெயர் லோகநாயகி. நான்கு வேதங்களுள் ஒன்றான சாமவேதத்தின் பெயரால் அமைந்தவர் இந்த ஆலய ஈஸ்வரர். ஜைமினி முனிவர் சாம வேதத்தை ஓதி, இறைவனை இங்குதான் வழிபட்டார். தனது தாயை கொன்ற பாவம் நீங்க பரசுராமர் இங்கு வந்து வழிபட்டதால் இந்த தலத்துக்கு 'பரசுராமேஸ்வரம்' என்றும் ஒரு பெயர் உள்ளது. 63 நாயன்மார்களுள் ஒருவரான ஆகாய நாயனார் அவதரித்து முக்திபெற்ற தலம்.

ஆகாய நாயனார்......... சண்டிகேசுவரர் தனது தந்தையை, தானே சீவிக்கொன்ற குற்றத்தை நீக்கும் பொருட்டு இங்குள்ள இறைவனை வழிபட்டு வீடு பேறுபெற்ற வரலாறும் உள்ளது. அதற்கு ஏற்றாற்போல் சுவாமி சன்னதியில் இருபுறமும் விநாயகரும், சண்டிகேசுவரரும் காட்சி அளிக்கிறார்கள். இதுவேறு எந்த தலத்திலும் பார்க்க இயலாத ஒன்றாகும்.

இந்திரன், குரு பகவானின் அறிவுரையின்படி இத்தலத்தில் இறைவனை பூஜித்து சாபம் நீங்க பெற்றான். 63 நாயன்மார்களுள் ஒருவரான ஆகாய நாயனார். இடையர் குலத்தில் அவதரித்தவர். சிவபெருமான் மீது நீங்கா அன்புடையவரான ஆகாய நாயனார், தன் குலத்தொழிலாகிய ஆடு மேய்த்தல் தொழிலோடு புல்லாங்குழலில், சாமவேதத்தின் உண்மை பொருளாகிய திரு ஐந்து எழுத்தை(நமசிவாய) தம்மை மறந்த அளவில் வாசித்தார்.

அதிமதுரமான குழலிசை கேட்டு மிகுந்த பசியுடன் இருந்த கன்றுகள் தன் தாயுடன் உணவு அருந்துவதை மறந்து நின்றன. அது மட்டுமின்றி கொடிய விலங்குகளும், புல்லினங்களும் தம் பகைமையை நீக்கி ஒன்றுடன் ஒன்று நட்பாயின.

ராவணனின் ஆணவம்............ இந்த நிலையில் கார்த்திகை மாதம் அஸ்த நட்சத்திரம் கூடிய நன்னாளில் ஆகாய நாயனார் கொன்றை மரத்தடியில் தன் குழலில் திருஐந்தெழுத்தினை இசைக்க கேட்ட சிவபெருமான் உமையம்மையுடன் அங்கு வந்து முக்தி அருளினார். ஆகாய நாயனாரும் வேன்குழல் வாசித்தபடியே கைலாயம் சென்றார்.

நாயனார், குழலை ஏந்திய நிலையில் இத்திருக்கோவிலில் வடமேற்கில் தனி சன்னதி கொண்டுள்ளார். மகா சிவபக்தனாக இருந்த ராவணன் ஒருமுறை வான வீதியிலே ரதத்தில் வலம் வந்தபோது அவனது பயணம் தடைபட்டது. காரணம், வழியில் குறுக்கிட்ட ஒரு மலை. 'ஏழு உலகையும் வென்ற நாம் இந்த மலையை சுற்றி செல்வதா?

இதை அப்படியே பெயர்த்து எறிந்து விட்டு தனது பயணத்தை தொடர்வோம்' என்று முடிவு செய்த ராவணன், தனது புஜபலத்தையே பெரிதாக எண்ணி மலையின் அடிவாரத்தை நெருங்கி தனது இருபது கரங்களால் அப்படியே பெயர்த்தான். அந்த மலை சற்றே அசைந்தது.

இசை ஞானம் பெற்றான்......... அந்த மலைமீதுதான் உலகநாதனும், அகிலாண்டேஸ்வரியும் அமர்ந்து இருக்கிறார்கள். அது திருக்கயிலாயமலை என்பது ராவணனுக்கு தெரியாது. அவன் மலையை பெயர்க்க முயன்றபோது உமையவளுக்கு கலக்கம். அப்படியே மகேசுவரனை தழுவிக்கொண்டாள். உடனே உலகநாதன், தனது கால் பெருவிரலால் கயிலாய மலையை சற்றே அழுத்தினார். அவ்வளவுதான்!

கயிலை மலையின் பாரத்தை தாங்கிட முடியாது திணறி தவித்த ராவணன் ஓலமிட்டான். ராவணனின் அலறலை கேட்டு அங்கு வந்த நாரத முனிவர், இந்த சிக்கலில் இருந்து விடுபட ராவணனுக்கு அறிவுரை தந்தார். ‘இசையில் மயங்குபவர் எம்பெருமான். அவருக்கு பிரியமான சாம கானத்தால் அவரை மகிழ்வித்து அவரது திருவருளை பெற்றிடு’ என்று கூறினார்.

தனது பத்து தலைகளில் ஒன்றை திருகியெடுத்தான் இலங்கேசுவரன். நரம்புகளை தந்திகளாக்கி, தனது தலையை குடமாக்கி ஒரு வீணையை உருவாக்கினான். ராவணன் மீட்டிய இசை, ஈசனை மனம் இளக செய்தது. இலங்கேசனை துன்பத்தில் இருந்து மீட்டார் கயிலை நாதர். இசைக்கு மயங்கிய எம்பெருமான் சாமவேதீசுவரர் என்ற திருநாமத்தோடு அருள்பாலிக்கும் இந்த தலத்து இறைவனையும், இறைவியையும் வணங்கினால் இசை ஞானம் பெறலாம்.

ஆலயத்தின் சிறப்பு........ இரயிக்குவ முனிவர் தவம் செய்து பற்குனி தீர்த்தத்தை வரச்செய்து தனது முன்னோர்களுக்கு பாவ விமோசனம் பெற்றுக்கொடுத்ததும், சியவன முனிவராலும், உதங்க முனிவராலும் இந்திரனுக்கு ஏற்பட்ட சாபங்கள் நீங்க பெற்றதும் இந்த கோவிலில்தான். குபேரன் இந்த கோவிலில் சிவபெருமானை வழிபட்டு பேறு பெற்றான். ரதிதேவிக்கும் பதியளித்த சிறப்பு இந்த ஆலயத்துக்கு உண்டு.

கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோவிலின் வாயிலின் முன்புறம் மூன்று நிலைகள் கொண்ட ராஜகோபுரம் உள்ளது. ஒரு சிறிய கிணறு பரசுராமனின் நினைவாக 'பரசுராமதீர்த்தம்' என சுத்தமான நீருடன் இரண்டாம் பிரகாரத்தில் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ளது.

பிரதான சன்னதிகளுக்கு முன்பாக உள்ள இரண்டாம் நுழைவு வாயிலில் துவார பாலகர்களுக்கு பதிலாக தென் புற சுவற்றில் உள்ள மாடத்தில் 'அதிகார நந்தி தன் துணைவியாருடனும்' வடபுற சுவற்றில் உள்ள மாடத்தில் 'ஆக்கு கணபதியும்' வீற்றிருப்பது வேறு எந்த தலத்திலும் பார்க்க இயலாத ஒன்றாகும்.

கல்விச் செல்வம் அருளும் தட்சிணாமூர்த்தி......... இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் சுவாமி கருவறையை சுற்றி வலம் வரும்போது தென்புற மாடத்தில் 'தட்சிணாமூர்த்தி' ஆலமர நிழலில் அமர்ந்த கோலத்தில் உள்ளதை பார்க்கலாம். வழக்கம்போல் எல்லா இடத்திலும் இருக்கும் வலதுகை 'சின் முத்திரை' வடிவில் இல்லாமல் அபயகரத்துடன் அருள்பாலித்து வருவது இத்தலத்திற்கு ஒரு சிறப்பாகும்.

கல்விச் செல்வம் அருளுகிறார். தவிர, குழந்தை பேறு வேண்டுவோர், இவரிடம் கோரிக்கை வைத்தால் அவ்வாய்ப்பு வாய்க்கப்பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குருப்பெயர்ச்சி விழா இந்த கோவிலில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

கோபக்காரர்களை சாந்தமாக்கும் கோவில்....... குழப்பங்கள் மற்றும் மன கவலைகளுடன் வரும் பக்தர்களை தெளிவாக்கி திருப்பி அனுப்பி வைக்கும் இத்திருத்தலத்தை கோபக்கார மனிதர்கள், அதாவது கோப குணம் கொண்டவர்கள் தங்களது கோபத்தை விட்டொழிக்க இந்த கோவிலுக்கு வந்து சாமவேதீஸ்வரரை வணங்கினால் சாந்த சொரூபி ஆகலாம். சாமவேதத்துக்கும், சாந்தத்துக்கும் அவ்வளவு தொடர்புஇருக்கிறது போலும்.

கோவில் அமைப்பு........... இத்திருக்கோவிலில் மூல மூர்த்தியாக சிவபெருமான் லிங்க வடிவில் 'சாமவேதீஸ்வரர்' என்னும் திருப்பெயருடன் அருள்பாலித்து வருகிறார். இத்தலத்து இறைவன் 'உலகநாயன்' என்ற திருப்பெயருடன் இரண்டாம் பிரகாரத்தில் வடபுறத்தில் தனி கோவில் கொண்டு தெற்கு நோக்கி காட்சியளிக்கிறார்.

கருவறைச்சுற்றில் மேற்கு மாடத்தில் ஒரே உருவத்தில் வலது பக்கம் சிவபெருமானும், இடது பக்கம் விஷ்ணுவாகவும் சிவ-விஷ்ணு திருமேனியாக சங்கரநாராயணன் என்ற பெயருடன் காட்சியளிக்கிறார். வடக்குப்புற மாடத்தில் பிரம்மா தாமரை மலரின் மீது நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

கோவில் கருவறை சுற்றுப்பிரகாரத்தின் மேல்புறம் நடுவில் உள்ள சிறுகோவிலில் முருகப்பெருமான், கல்யாண சுப்பிரமணியர் எனும் திருப்பெயருடன் நின்ற கோலத்தில் தனது துணைவியர்களில் தெய்வானை நின்ற கோலத்திலும், வள்ளிதேவி மட்டும் தனி மயிலில் அமர்ந்த கோலத்திலும் காட்சி தருவது வேறு எந்த கோவிலிலும் இல்லாத தனிச்சிறப்பாகும்.

இத்தலத்தில் உள்ள தீர்த்தங்களில் குறிப்பிடத்தக்கவை கோவிலின் உட்புறம் உள்ள பரசுராமன் தீர்த்தம் மற்றும் திருக்கோவிலின் வடபுறம் உள்ள கயாபங்குனி என்ற பெயருடன் ஓடும் சிறிய ஆறும் ஆகும். இத்தலம் மேற்படி தீர்த்தங்களின் கரையில் அமைய பெற்றுள்ளதால் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கருமங்களை செய்வதற்கு சிறந்த இடமாக கூறப்படுகிறது.

சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமைவாய்ந்த இந்த ஆலயத்தில் அமைந்து உள்ள இறைவனை தரிசித்தாலே பித்ரு தோஷங்கள் நீங்கும். பித்ரு தோஷ நிவர்த்திக்கான பலன்கள் இத்தல இறைவனை தரிசித்தாலே கிட்டும் என்கிறது தல புராணம்.
avatar
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum