Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


கோலவிழி அம்மன் கோவில்

View previous topic View next topic Go down

கோலவிழி அம்மன் கோவில்

Post  birundha on Sun Mar 31, 2013 3:21 pm

ஒவ்வொரு சிறப்பு மிக்க விழாவுக்கும் தமிழகத்தில் ஒவ்வொரு கோவில்கள் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றன. கார்த்திகை தீபத் திருவிழாவானது அனைத்து இடங்களுக்கும் பொதுவாக நடைபெற்றாலும், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் மகா தீப திருவிழா மிகவும் பிரசித்திப் பெற்றது.

அதே போல்சித்திரை திருநாள் விழாவுக்கு மதுரை, ஆருத்ராதரிசன விழாவுக்கு சிதம்பரம் என்ற வரிசையில், அறுபத்து மூவர் திருவிழா என்பது மயிலாப்பூர் தலத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

கோலவிழி அம்மன்........ இந்த விழாவானது பங்குனி பெருவிழாவின் ஒரு அங்கமாக கபாலீஸ்வரர் கோவிலில் நடத்தப்படுகிறது. இவ்விழாவின் தொடக்கமாக முதல் மரியாதை பெறும் தலமாகத் மயிலாப்பூரில் உள்ள கோலவிழி அம்மன் என்னும் பத்ரகாளி அம்மன் திருக்கோவில் திகழ்கிறது. கோலவிழி அம்மன் கோவில், கபாலீஸ்வரர் கோவிலின் துணைக்கோவிலாகும்.

முதல் மரியாதைக்கான காரணம் துணைக்கோவில் என்பது அல்ல... மயிலை நகரின் எல்லைகளைக் காத்தருளும் காவல் தெய்வமாக இந்த கோலவிழி அம்மன் திகழ்வதே அதற்கு காரணம். எளிமையாக அமைந்துள்ள கோலவிழி அம்மனின் நுழைவு வாயில் வடக்கு திசை நோக்கி அமைக்கப்பட்டிருக்கிறது.

ஆலயத்திற்குள் ஆஞ்சநேயர் சன்னதி, அரசடி விநாயகர், சப்தமாதர்கள், கருவறை முன்புறம் மற்றொரு விநாயகர், பாலமுருகர் சன்னதி ஆகியவை அமைந்துள்ளது. கோலவிழி அம்மனுக்கு எதிர்புறத்தில் பலிபீடமும், சிம்ம வாகனமும் காட்சி தருகின்றன.

சிவசக்தி சொரூபமாக........ வடக்கு நோக்கிய கருவறைக்குள் சிறிய வடிவிலான அம்மனும், அதற்கு பின்புறம் பிரம்மாண்ட கோலத்தில் சுதை வடிவிலான சிற்பமாக மற்றொரு அம்மனும் அருள்பாலிக்கின்றனர். சிறிய அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளும், பெரிய அம்மனுக்கு அலங்கார ஆராதனைகளும் நடத்தப்படுகின்றன.

அமர்ந்த கோலத்தில் உள்ள அன்னையே கோலவிழி அம்மனாக விளங்குகின்றாள். இடது காலடியில் அசுரனின் தலையை அழுத்தி, வலது காலை மடக்கிய கோலத்தில் அருளாட்சி புரிகிறாள். எண் கரங்களில் வலது புற நாற்கரங்களிலும் சூலம், வாள், உடுக்கை, வேதாளம் ஏந்தியும், இடது புற நாற்கரங்களில் கேடயம், அங்குசம், மணி, கபாலம் ஏந்தியும் அன்னை காட்சி தருகிறாள்.

சிரசில் உள்ள தீ ஜூவாலைகளில் பதினைந்து இதழ்கள், அதன் நடுவே சீறும் நாகம், திருமுடியின் இடதுபுறம் சந்திரன், கங்கை, வலது புறம் நாகம், காதணி ஆகியவற்றை அணிந்து சிவ சக்தி சொரூபமாக கோலவிழி அம்மன் காட்சியளிக்கிறாள்.

தொன்மைச் சிறப்பு........... கோலவிழி அம்மன் கோவில், கபாலீஸ்வரர் கோவிலுக்கு இணையான தொன்மைச் சிறப்பு கொண்டதாகும். இந்த ஆலயத்தில் கலைநயம் மிக்க நடனமாடும் காளி உற்சவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இது சோழர் காலத்தைச் சார்ந்ததாகும். சிதிலமடைந்திருந்த கோலவிழி அம்மன் ஆலயமானது, 1981-ம் ஆண்டு அடியார்கள் ஆதரவாலும், மயிலாப்பூர் சுந்தரராம சுவாமிகள் ஆதரவாலும் திருப்பணி செய்யப்பட்டு வழிபாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இந்த ஆலயத்திற்கு மேற்கே, சிவபெருமானை மதிக்காமல் யாகம் செய்த தக்கனின் யாகத்தை அழித்த வீரபத்திரர் கோவில் அமைந்துள்ளது சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது.

இளநீர் அபிஷேகம்.......... இந்த அன்னையின் இயற்பெயர் பத்ரகாளி என்பதாகும். பத்ரா என்பதற்கு மங்களம் என்று பொருள் உண்டு. தன்னை நாடி வருவோருக்கு மங்களங்களை அள்ளித் தருபவளாகத் திகழ்வதால், இவள் பத்ரகாளியாகவும் விளங்குகின்றாள். அன்னையின் சிறப்பே அவளின் விழிகள்தான்.

வைத்த கண் வாங்காமல் பார்க்கத் தூண்டும், கருணை அருளும் நாயகியாக, கோலவிழி அம்மன் அருள் புரிகிறார். திருமணத் தடை நீங்குதல், குழந்தை பாக்கியம், குடும்ப சிக்கல்கள், பிணி தீர்த்தல், மன அமைதி வேண்டி வருபவர்களுக்கு அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுபவளாக வீற்றிருக்கிறாள், கோலவிழி அம்மன்.

ராகுதோஷம் உள்ளவர்கள் கோலவிழி அம்மனையும், இங்குள்ள வராகி அம்மனையும் வழிபட்டு பலன் பெறலாம். மேலும் தீராத நோயுற்றவர்கள், கருவறையின் வெளியே உள்ள ஆமை புடைப்புச் சிற்பத்திற்கு ராகு காலத்தில் இளநீர் அபிஷேகம் செய்து, அர்ச்சனை, ஆராதனை செய்தால் நோயின் தாக்கம் படிப்படியாக குறைந்து நோய் குணமாகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

பால்குட பெருவிழா......... இந்த ஆலயத்தில் சித்ரா பவுர்ணமியில் பூச்சொரிதல் விழா, ஆடிப்பூர விழா, தீச்சட்டி ஏந்தும் விழா, புரட்டாசியில் நவராத்திரி விழா மற்றும் 10-ம் நாள் சூரனை வதம் செய்யும் விழா, மாசியில் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் பால் குடப் பெருவிழா ஆகியவை குறிப்பிடத்தக்கதாகும்.

மாசி மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 7 மணி அளவில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து பால்குடங்கள் புறப்படும். பக்தர்கள் பால்குடங்களை ஏந்தி, கோவிலை வலம் வந்து, ஊர்வலமாக கோலவிழி அம்மன் ஆலயத்தை நோக்கி பயணிப்பார்கள். கோலவிழி அம்மன் கோவிலை அடைந்ததும், உற்சவ மூர்த்திகளுக்கு பக்தர்கள், தங்கள் கரங்களால் அபிஷேகம் செய்து நேர்த்திக் கடனை செலுத்துவார்கள்.

அன்றைய தினம் இரவு அன்னை சிம்ம வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த பால்குட விழாவில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்து பெரும்பாலான பக்தர்கள் வந்திருந்து பால்குட ஊர்வலத்தில் கலந்துகொள்வார்கள்.

வேண்டியது கிடைக்க வேண்டுதலுடன் பால்குடம் எடுத்தால் அம்மனுக்கு வைக்கப்பட்ட கோரிக்கை யானது ஓராண்டுக்குள் நிறைவேறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. வருகிற மார்ச் மாதம் 3-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோலவிழி அம்மன் கோவில் பால்குட பெருவிழா நடைபெறுகிறது.

அமைவிடம்....... சென்னை கடற்கரைச் சாலையில் கலங்கரை விளக்கத்தில் இருந்து தென்மேற்கே அரை கிலோ மீட்டர் தூரம் சென்றால் கோலவிழி அம்மன் ஆலயத்தை தரிசனம் செய்து வரலாம். கபாலீஸ்வரர் கோவிலுக்கு வடகிழக்கே அரை கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் தரிசனத்திற்காக கோவில் திறந்திருக்கும்.
avatar
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum