Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


யார் இந்த Dr.ஆப்ரகாம் தாமஸ் கோவூர்?

Go down

யார் இந்த Dr.ஆப்ரகாம் தாமஸ் கோவூர்?

Post  amma on Fri Apr 05, 2013 1:44 pm

நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான பகுத்தறிவாளர் கோவூர், ஏ.டி. கோவூர் என்று பரவலாக அறியப்பட்ட கேரளப் பகுத்தறிவாளர் ஆப்ரகாம் தாமஸ் கோவூர். 1898ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் நாள் கேரள மாநிலம் திருவள்ளா எனும் ஊரில் பிறந்து, வங்காள மாநிலத்தில் படித்துப் பட்டம் பெற்று, சிறீலங்கா நாட்டில் பணியாற்றி வாழ்ந்து மறைந்தவர்.

மூடநம்பிக்கைகளை ஒழிப்பதிலும், அறிவியல் ரீதியாகப் பரப்புரை செய்து அவைபற்றிய நம்பிக்கைகளை மக்கள் மனதிலிருந்து அப்புறப்படுத் துவதிலும் சலியாத தொண்டு புரிந்தவர். சில கைத்திறமைகளைக் கைக்கொண்டு மூடமக்களின் மனதில் அவற்றை அற்புதங்கள் எனத் தோன்றுமாறு, மயக்கி ஏமாற்றிப் பணமும் புகழும் பெற்ற மோசடிக்காரர்களைத் தோலுரித்தவர். கடவுள் அவதாரம் என்றும் கடவுளே என்றும்கூடப் பிரச்சா ரம் செய்து பிழைத்துக் கொண்டிருப்பவர்களை வாதுக்கு அழைத்துத் தோற்று ஓடும்படிச் செய்தவர். இதனால் இந்தியத் துணைக்கண்ட நாடுகளில் சிறப்பாகப் பேசப்பட்ட பெருமைக்குரியவர்.

அற்புதங்களைச் செய்துகாட்டி மக்களைத் தம் பக்கம் ஈர்த்ததாக பைபிளில் குறிப்பிடப்படும் தேவகுமாரன் யேசு. இப்போது தேவகுமாரனே தேவன் என்று பிரச்சாரம் செய்யப்பட்டு – மகனே அப்பனாக மாறிவிட்ட யேசுவின் மதம் இந்தியாவில் முதன் முதலில் காலூன்றிய பகுதி மலையாளம். அந்தக் கிறித்துவ மதத்தில் உலகில் உள்ள பிரிவுகளை எண்ணமுடியாது எனும் அளவுக்குப் பல பிரிவுகள். அதில் ஒன்று என்றாலும்கூட, அதுவே ஆதிப் பிரிவு எனப்படுவது மர்தோமா சிரியன் கிறித்துவம் ஆகும். அதன் தேவாலயங்கள் தாம் இந்திய மண்ணில் முதன் முதல் கூட்டப்பட்டவை என்பது வரலாறு. அந்தக் கிறித்துவப் பிரிவில் பிறந்தவர் கோவூர்.

ஒரே மந்தை – ஒரே மேய்ப்பன் என்று பைபிள் கூறினா லும்கூட மந்தை கள் பலப்பல வாக உலகம் முழுவதிலும் இருப்பதைக் காண்கிறோம். சாதாரணமாக A முதல் Z வரை என்பார்கள். இந்த மதத்தின் மந்தைகளை எண்ணுவதற்கு ஆங்கில நெடுங்கணக்கின் 26 எழுத்துகள் போதா. தமிழ் நெடுங்கணக்கின் 247 எழுத்துகளைக் கொண்டு மந்தைகளை எண்ண முடியுமா என்பதை முயற்சித்துப் பார்த்துத்தான் முடிவுக்கு வர முடியும்.

கோவூரின் தந்தை மர்தோமா சிரியன் கிறித்துவப் பிரிவின் மலபார் தேவாலயத்தில் பாதிரி. விகார் ஜெனரல் என்று அழைக்கப்படக்கூடிய உயர்நிலைப் பாதிரி. கோவூர் ஈப்பே தொம்ம கட்டனார் என்பது அவர் பெயர். அற்புதம் செய்து மதம் பரப்பிய யேசுவின் மதப் பிரச்சாரகரின் மகனாகப் பிறந்த ஆப்ரகாம் கோவூர்தான் அற்புதங்களையும் அப்படிச் செய்த மோசடிக்காரர்களையும் தோலுரித்து அம்பலப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தேவனும் எதிர்பார்த்திருக்காது; தேவ மகிமையைப் பாடிய கோவூரின் தந்தையும் எதிர்பார்த்திருக்க மாட்டார். என்ன செய்வது? அறிவின் ஆற்றல், அதிலும் பகுத்தறிவின் ஆற்றல் அப்பேற்பட்டது!

கல்கத்தாவில் வங்கபாசி கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற ஆப்ரகாம் கோவூர் சிறிது காலம் கேரளாவில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். பின்னர் இலங்கைக்குச் சென்று தாவரவியல் பேராசிரியராகப் பல கல்லூரிகளில் பணியாற்றினார். கடைசியாகக் கொழும்பு நகரின் தர்ஸ்டன் கல்லூரியில் பணியாற்றி 1959இல் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற நாத்திகரான கோரா அவர்கள் தாவரவியல் பேராசிரியராக இலங்கையில் பணிபுரிந்தவர் என்பது நினைவுகூரத்தக்கது. 1948 வரை இலங்கை இந்தியாவின் ஒரு மாநிலமாக இருந்தது என்பது தெரிந்திருக்கும்.

அரசுப்பணி, ஆசிரியப்பணி என்ற கட்டுகள் அவிழ்ந்த நிலையில் தம் முழு ஆற்றலையும் நேரத்தையும் உழைப்பையும் பகுத்தறிவுப் பணிப் பிரச்சாரத்திற்கு அளித்தார் கோவூர். 1960இல் இலங்கை பகுத்தறிவாளர் கழகத்தை அமைத்தார். அதன் தலைவராக அவரே தெரிந்தெடுக்கப்பட்டுப் பணியாற்றினார். 1978இல் அவர் இறக்கும்வரை அப்பொறுப்பில் அவரே தொடர்ந்து உழைத்தார்.

1961ஆம் ஆண்டில் அய்ரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்து அந்நாடுகளின் பகுத்தறிவாளர்களிடம் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். தாராள சிந்தனையாளர்கள் (FREE THINKERS)” என்ற பெயரில் இருந்த பகுத்தறிவாளர்கள் அவர்கள். இலங்கைப் பகுத்தறிவாளர் தூதன் எனும் பெயரிலான ஏடு ஒன்றைத் தொடங்கி அதன் ஆசிரியராக இருந்து பரப்புரை செய்து எழுதி வந்தார். நார்சிசஸ் எனும் புனைப்பெயரில் நிறையக் கட்டுரைகளைச் சிலகாலம் எழுதி வந்தவர், பின்னர் சொந்தப் பெயரிலேயே எழுதத் தொடங்கினார். அக்கட்டுரை கள் முதலில் மலையாள மொழியில் மொழிபெ யர்த்து வெளியிடப்பட்டு, பின்னர் இந்திய மொழி களில் மொழிபெயர்க்கப்பட்டுப் பரப்பப்பட்டன.

கடவுள், பேய்கள், ஆவிகள் எனும் தலைப்பில் அவரது நூல் பஞ்சாபி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தபோது, அவசர அவசரமாக அதற்குத் தடை விதித்தவர் பிரகாஷ் சிங் பாதல் எனும் சிரோமனி அகாலி தளம் எனும் சீக்கிய மதவாதக் கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முதல்வர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த செயல் இது. கிறித்துவ மதத்தை விமர்சித்து, அதன் ஆவி நம்பிக்கைகளைக் கண்டித்து, கடவுள், பிசாசு பற்றிய பொய்மைகளை அம்பலப்படுத்தி நூற்றுக்கணக்கான நூல்கள் வந்து கொண்டிருக் கின்றன. அந்த மதத்தைச் சார்ந்த ஆளுவோர் அவற்றைத் தடைப்படுத்துவது கிடையாது. அண்மையில் டாவின்சி கோட் எனும் நூலுக்கு எதிர்ப்பு மதவாதிகளால் கிளப்பப்பட்ட போதும் அரசுகள் அதனை ஏற்கவில்லை. மதம் தனி, ஆட்சி தனி எனும் தத்துவம் சொல்லிலும் செயலிலும் கடைப்பிடிக்கப்படுகிறது, அங்கே! மதவாதிகளா கவும் மதவெறியர்களாகவும் இருப்பவர்கள் ஆட்சிக்கட்டிலில் இருக்கின்ற காரணத்தால் தடைவிதிக்கப்படுகிறது பஞ்சாபில்!

கிறித்துவர்கள் மறுபிறவியில் நம்பிக்கை இல்லாதவர்கள். மனிதர்கள் தவறு (பாவம்) செய்யக்கூடாது. நல்லவற்றையே செய்திட வேண்டும். தீயவற்றைச் செய்தால் அதற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டும். (தவறை உணர்ந்து பாவமன்னிப்புக் கோரலாம்; அதற்குக் கொஞ்சம் பணம் செலவாகும் என்று மக்களை ஏமாற்றிக் கொள்ளை அடித்தது கத்தோலிக்க மதபீடம். அது தற்போது இல்லை.) அந்தத் தண்டனையை கர்த்தர் வழங்கும் நாள் இறுதித் தீர்ப்பு நாள் என்பதும், அந்த நாள் வரை மனிதர்கள் (இறந்துபோனாலும்) உடல் வைக்கப்பட்டி ருக்க வேண்டும்; பிணங்களை எழுப்பி, விசாரித்து, தீர்ப்பு வழங்கப்படும் என்பதற்காக பிணங்கள் புதைக்கப்பட வேண்டும் என்பது கிறித்துவ மதக்கட்டளை. அந்த மதத்தில் பிறந்துவிட்டார் என்றாலும்கூட, ஆப்ரகாம் கோவூர் மதக் கருத்துகளுக்கு மதிப்புத் தருபவர் அல்லர்; மதபீடத்தின் முன் மண்டியிடக் கூடாது என்றவர் ஆதலால் இறப்புக்குப் பின் தம் உடலை எரிக்கவோ, புதைக்கவோ கூடாது என்று உயில் எழுதி வைத்தவர். தம் கண்களைக் கொடையாகத் தந்துவிட வேண்டும் என்றும் உடலை மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காக அளித்துவிட வேண்டும் என்றும், தம் உடல் எலும்புக்கூடு தாம் கடைசியாகப் பணியாற்றிய தர்ஸ்டன் கல்லூரியின் அறிவியல் ஆய்வுக்கூடத்திற்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் தம் இறுதி விருப்ப ஆவணத்தில் எழுதியிருந்தார். அவ்வாறே அவை நிறைவேற்றப்பட்டன.

இந்தியாவின் முதல் தலைமை அமைச்சர் ஜவகர்லால் நேருகூட உயில் எழுதி வைத்தார். தாம் இறந்தபின் தம் உடல் எரிக்கப்பட்டு, அச்சாம்பல் விமானம் மூலம் வானில் கொண்டு செல்லப்பட்டு காற்றில் தூவப்பட வேண்டும்; அதன் மூலம் என் சாம்பல் இந்தியாவின் மலைகள், மரங்கள், செடிகொடிகள், ஆறுகள், கடல்கள், கட்டடங்கள் ஆகியவற்றில் படரவேண்டும் என்று எழுதினார். தாம் இறந்தபின் எந்தவித மதச் சடங்குகளும் செய்யக்கூடாது என்றும் அப்படிச் செய்தால் அது தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வதோடு பிறரையும் ஏமாற்றும் செயலாகும் என்றும் சிறப்பாக எழுதி வைத்தார். ஆனால், நடந்தது என்ன? அவரது ஒரே வாரிசான இந்திராகாந்தி இந்தியாவில் உள்ள ஆறு மதங்களின் சடங்குகளையும் செய்யச் சொல்லித் தன் தந்தையின் உடலை எரித்தார். தன் மகன் ராஜீவ் காந்தியைக் கொண்டு, கங்கையில் அலகாபாதில், பிண்டம் கரைக்கும் இந்து மதச் சடங்கையும் செய்தார். இறந்தோரின் இறுதி விருப்பத்தைக் குடும்பத்தார் நிறைவேற்றிய இலட்சணத்தை இன்று நினைத்தாலும் கோபம் வருகிறதே!

1963ஆம் ஆண்டில் ஆப்ரகாம் கோவூர் பதிவு செய்த ஆவணத்தின் மூலம் கடவுள், பேய், பிசாசு, ஆவி நம்பிக்கைக்காரர்களுக்கு விடுத்த அறைகூவல் உலகப் பிரசித்தி பெற்றது. அவரது சவாலை ஏற்று நிரூபிப்பவர்களுக்கு ஒரு லட்சம் இலங்கை ரூபாய் பரிசு அளிக்கப்படும் எனவும் அறிவித்திருந்தார். 23 செயல்களைப் பட்டியலிட்டு அவற்றில் ஏதாவது ஒன்றையாவது செய்து காட்டுபவர் யாராக எந்த நாட்டில் இருந்தாலும் பரிசுத் தொகை அளிக்கப்படும் என அறிவித்திருந்தார். ஒருவரும் முன்வரவில்லை. அவர் இருந்தவரையும் வரவில்லை. இறந்த பின்னரும் வரவில்லை. அவர் விதித்த 23 செயல்கள் இவைதாம்:

ஒட்டப்பட்ட சுவரில் வைக்கப்பட்ட ரூபாய் நோட்டின் வரிசை எண் சொல்லப்பட வேண்டும்.

ரூபாய் நோட்டின் நகலை வரவழைத்துக் காட்டல்.

எரியும் நிலக்கரித் தணலின்மீது அரைநிமிடம் காலை ஆட்டாமல் அசைக்காமல் நிற்றல்.

தான்கூறும் பொருளை வெறும் கையில் வரச்செய்தல் (விபூதி வரவழைப்பதுபோல்)

கனத்த பொருளை அசைத்தல்/வளைத்தல்

அடுத்தவர் மனதில் நினைப்பதைக் கூறல்

துண்டிக்கப்பட்ட கையை, பிரார்த்தனை மூலம் ஓர் அங்குலமாவது வளரச் செய்தல்.

யோகசக்தி மூலம் அந்தரத்தில் பறந்து காட்டல்.

யோகசக்தி மூலம் இதயத்துடிப்பை 5 நிமிடங்கள் நிறுத்தி வைத்தல்.

நீரின் மேல் நடத்தல் (ஹடயோகம்)

உடலை ஓரிடத்தில் விட்டுவிட்டு, மற்றோர் இடத்தில் தோன்றுதல் (கூடுவிட்டுக் கூடு பாய்தல்)

எதிர்காலத்தில் நடக்கப்போவதைக் கூறல்

ஆழ்நிலைத் தியானம் மூலம் அல்லது யோக தியானம் மூலம் உள்ளொளி எழுப்புதல்.

தெரியாத மொழியில் பேசுதல்/புரிந்துகொள்ளல் (முற்பிறவியில் பேசிய அன்னிய மொழியில்) பிசாசு, ஆவியை ஒளிப்படம் எடுக்க வாய்ப்பாகத் தோன்றச் செய்தல்.

ஒளிப்படம் எடுத்தபின் நெகடிவ்விலிருந்து உருவை அழித்தல்

பூட்டப்பட்ட அறையிலிருந்து வெளிவருதல்

தெய்வீக சக்தியின் மூலம் ஒரு பொருளின் எடையைக் கூடச் செய்தல்.

மறைக்கப்பட்ட பொருளைக் கண்டுபிடித்தல்.

நீரை பெட்ரோலாக அல்லது ஒயினாக மாற்றல்.

ஒயினை இரத்தமாக மாற்றுதல்

பத்துப்பேரின் ஜாதகம், கைரேகை ஆகியவற்றில் இருந்து அவரவர் பிறந்த நாள், நேரம் ஆகியவற்றைக் கூற, சரியான ஜாதகத்தை, கைரேகையை எடுத்துக் காட்ட வேண்டும்.

புட்டபர்த்தி சத்ய சாய்பாபா, பன்றிமலை சாமி, நீலகண்ட தாதா, நிர்மலா தேவி, சிறீவஸ்தவா, பூஜ்யதாதா, டட்டாபால், திரிப்ரயர் ரோகினி, கிட்டுதேவ் ஆனந்தமூர்த்தி, காமுபாய், சின்மயானந்த், ரஜ்னீஷ், முக்தானந்த், சுவாமி ராமா, சுவாமி அரிதாஸ், சிவபாலயோகி, பகவான் ஞானானந்தா, குருமகராஜ், மகேஷ் யோகி, ஹசரத் அலி, டாக்டர் வடலைமுடி, தீர்த்தங்கரர், ஆர்.பி.திவாரி, ஊரிகெல்லர், கெலிய மிச்சைலோவா, ஜீன் டிக்சன், சிபில் வீக் போன்ற மோசடிக்காரர்களுக்குச் சவால் அனுப்பினார். எல்லா மதத்தவர்களும் இதில் அடக்கம். கீழை மேலை நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அனுப்பினார். ஒருவரும் சவாலை ஏற்கவில்லை. என்னே அற்புதங்கள்? என்ன மகரிஷிகள்? என்ன பிரம்ம ரிஷிகள்? என்ன ஆசார்யர்கள்? என்ன குருதேவர்கள்? என்ன ரெவரன்ட்கள்? என்ன வரசரத்கள்? எல்லாமே போலி! எல்லாமே ஹம்பக்!

ஒரே ஒரு நபர் ரூ.1,000/-_ முன்தொகை கட்டி அறைகூவலை ஏற்க முன்வந்தார். பெங்களூரைச் சேர்ந்த மருத்துவர் ஜி.வெங்கடராவ் என்பவர் தன் குரு ராகவேந்திர சாமி தெய்வீக சக்தி பெற்றவர் எனக் கூறிக்கொண்டு வந்தார். ஓம் ராகவேந்திர சரணம் என்று நாள் ஒன்றுக்கு 100 தடவை கூறிவந்தால் தெய்வீக சக்தியைப் பெறலாம் எனக் கூறினார். ஆனால், அறைகூவலில் கண்டுள்ள 23 செயல்களில் ஒன்றையும் தம்மால் செய்ய முடியாது எனக் கூறிவிட்டார். ஆறு வயதுப் பையன் ஒருவன் கண்களிலிருந்து விபூதி வருகிறது, தேன் வடிகிறது, பூக்கள் சொரிகின்றன, அவனைப் பார்க்க மைசூருக்குப் பக்கத்தில் கிராமத்திற்கு வாருங்கள் எனக் கூப்பிடும் அளவில் மூடத்தனம் நிறைந்தவராக இருந்தார் அந்த டாக்டர்!

_________________
avatar
amma

Posts : 3095
Join date : 23/12/2012

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum