Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


ஓமந்தூர் பீமேஸ்வரர் கோவில்

Go down

ஓமந்தூர் பீமேஸ்வரர் கோவில்

Post  ishwarya on Sat May 04, 2013 1:07 pm

ஆத்ம ஞானத்தை அடைய முயன்று கொண்டிருக்கும் சாதகர்கள் வழிபட ஏற்றதொரு திருக்கோவிலாக ஓமந்தூர் பீமேஸ்வரர் ஆலயம் திகழ்கிறது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திற்கு அருகில் உள்ள ஓமந்தூர் எனும் பழைமையான திருத்தலத்தில் அருள்பாலிக்கும் பாலாம்பிகை சமேத பீமேஸ்வரர் அனைத்து பக்தர்களுக்கும் ஆத்ம ஞானத்தை வழங்கி அருள்புரிந்து வருகிறார்.

தல வரலாறு............. ஏகாதச ருத்ரர்களில் ஒருவரான பீமனும், திருக்கிலாயத்தில் நிருதி(தென் மேற்கு) திசையின் காவலனாக விளங்க கூடிய பீமநாதனும், பஞ்சபாண்டவர்களில் ஒருவரான பராக்கிரம் மிக்க பீமனும் வணங்கியதால் இத்தல இறைவனுக்கு பீமேஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது.

ஓமந்தூர் என்று தற்போது பூஜிக்கப்படும் இந்த ஊர் பண்டைய காலத்தில் 'கிடங்கல்' எனும் பகுதியை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்த நல்லியக்கோடனின் ஓய்மா நாட்டின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. இதனை 'சிறுபாணாற்றுப்படை' என்ற பழந்தமிழ் இலக்கியத்தின் மூலம் அறிய முடிகின்றது.

இந்த திருக்கோவிலில் உள்ள ராஜராஜ சோழனின் 11-வது ஆட்சியாண்டு (985-1014) கல்வெட்டு இத்தலத்தை 'ஓவ்வூர்' என்றும், முதலாம் ராஜநாராயணசம்புவராயர்(1337-1368) கல்வெட்டு 'ஒய்மா நாட்டு ஓகந்தூர்' என்றும் கூறுகின்றன.

ஓமந்தூர் பீமேஸ்வரர் கோவில் கருவறை, இடைக்கட்டு அர்த்த மண்டபம், மகா மண்டபம், முன்மண்டபம் ஆகியவை எழில்மிகு தோற்றத்துடன் அமைக்கப்பட்டுள்ளதை கொண்டு, இத்திருக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டது என்பதை அறிய முடிகின்றது.

தமிழகத்தை ஆண்ட விஜயநகர பேரரசர்களும், சம்புவராய மன்னர்களும் இந்த திருக்கோவிலில் திருப்பணி செய்து வழிபட்டுள்ளனர் என்பதையும் வரலாறுகள் மூலம் அறிய முடிகிறது.

பீமேஸ்வரர்.................. ஓமந்தூர் திருத்தலத்தில் சதுரமான கருவறையின் நடுவே சுமார் 6 அடி உயரமுள்ள லிங்க வடிவில் பீமேஸ்வரர் பிரம் மாண்டமான தோற்றத்தில் அற்புத காட்சி தருகின்றார். ஆதியும், அந்தமும் இல்லாத அருட்பெருஞ்ஜோதியின் ஆனந்த தரிசனம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றது.

பீமேஸ்வரரை தரிசிக்கும்போது, 'ஆடிய காலும் அதில் சிலம்போசையும் பாடிய பாட்டும் கண்டு கொண்டேன்' என்று திருமூலர் தமது உள்ளக்கமலத்தில் கண்டு மகிழ்ந்த தில்லையம்பலத்து நாயகனின் தரிசனம் நம் மனக்கண்முன்பு தோன்றி பேரானந்தத்தை தருகின்றது.

பீமேஸ்வரரின் மேற்கு நோக்கிய விஸ்வரூப தரிசனம் வேறு எங்கும் காணமுடியாத அரிய தரிசனமாகும். திருக்கோவிலில் மூலவரான எம்பெருமானுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் நவக்கிரக நிலைகளின் காரணமாக ஏற்படும் கெடு பலன்கள் குறைந்து தோஷம் நீங்கிவிடும்.

நர்த்தன விநாயகர்............... இங்குள்ள இறைவன், திருவருளீசுவரத்தாழ்வார், திருவீமிசுவரமுடைய நாயனார்,தவப் பாதர நாயனார் போன்ற பல திருநா மங்களால் பூஜிக்கப்பட்டு வந்ததை பழைமையான கல்வெட்டுகளின் மூலம் அறிய முடிகின்றது. கருவறையின் புறச்சுவரில் உள்ள தேவகோட்ட மாடங்களில் தெற்கே தாமரை மலரின் மீது நின்று நர்த்தனமாடும் விநாயகப்பெருமானும் அருள்பாலிக்கின்றனர்.

மேலும் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு ஞானஉபதேசம் வழங்கும் தட்சிணாமூர்த்தி பார்ப்பவர்களின் பாவங்களை போக்கும் வகையில் காட்சி தருகிறார். கிழக்கே சங்குசக்கரம் ஏந்தி நிற்கும் திருமாலும், வடக்கு திசையில் ஒரு முகமாக அருள்பாலிக்கும் நான்முகனும், திரிபங்க நிலையில் நின்ற கோலத்தில் துர்க்கை தேவியும் அருள்பாலிக்கின்றனர். இந்த திருவுருவச் சிலைகள் திருக்கோவிலின் பழம்பெருமையை பறைசாற்றும் புரதான சிற்பங்களாக அருள்பாலிப்பது சிறப்பாகும்.

ஞானகாரகன்................ 'அசித்' என்ற அஞ்ஞான இருளை அகற்றி, மவுனமாக அமர்ந்து 'சித்' என்று கூறப்படும் ஞானத்தை உணர்த்தும் சின்முத்திரையுடனான தட்சிணாமூர்த்தியின் தரிசனம் கண்கொள்ளாக் காட்சியாகும். ஞானகாரகரான இவரை, கிரகிப்புத்திறன் குறைவாக உள்ள மாணவர்கள், வியாழக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை.

பீமேஸ்வரர் திருக்கோவிலுக்கு ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அறங்காவலராக இருந்தபோது அவரது வழிகாட்டுதலின்படி 1954-ம் ஆண்டு சிறப்பாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

பிரதோஷ பூஜை.............. கயிலைநாதனை எப்போது வேண்டுமானாலும் பூஜித்து வழிபடலாம். எனினும் குறிப்பிட்ட சில காலங்களில் அவனை போற்றி வணங்குவது அவன் திருவுள்ளத்துக்கு மிகவும் உகந்ததாகும். அந்நேரங்களில் விரதமிருந்து அர்ச்சனை செய்து பூஜித்து வழிபட்டால் பல கோடி ஆண்டுகள் வணங்கிய பலன் கிடைக்கும்.

அத்தகைய விசேஷ நாட்களில் ஒன்றுதான் பிரதோஷ நாள். தோஷங்கள் எல்லாம் நீங்கப்பெற்று இம்மையில் மட்டுமல்லாது மறுமையிலும் வீடுபேற்றை நல்கக்கூடிய பிரதோஷ வேளையில் இத்தல இறைவனை வணங்குவதால் வாழ்க்கையில் ஏற்றம் பெற்று அஷ்ட ஐஸ்வர்யங்களையும், சகல சவுபாக்கியங்களையும் பெறலாம்.

வைகுண்ட பெருமாள்............... இச்சிறப்புமிக்க சிவாலயத்திற்கு அருகில் மிகவும் சிதலமடைந்த நிலையில் வைகுண்ட பெருமாள் திருக் கோவில் அமைந்துள்ளது. சுமார் 10 அடி உயரத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து கம்பீரமான தோற்றத்தில் சங்கு, சக்கரம் ஏந்தி தனது தேவியருடன் காட்சி தரும் பெருமானின் அழகை காணகண்கோடி வேண்டும்.

சர்வலோக சரண்யனான வைகுண்ட வாசனின் எழில் திருமேனியை வார்த்தைகளில்வடிக்க இயலாது. திண்டிவனம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் பீமேஸ்வரர் கோவில் உள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum