Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


இதயம் தொடர்பான பிரச்சினைகளும் அதன் தீர்வுகளும்

View previous topic View next topic Go down

இதயம் தொடர்பான பிரச்சினைகளும் அதன் தீர்வுகளும்

Post  ishwarya on Tue May 21, 2013 1:27 pm

இதய நோய்களில் முக்கிய இடம் வகிப்பது அரித்மியா (arrhythmia) என்கிற சீரற்ற இதயத் துடிப்பு நோய். இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இதயத் துடிப்பு நின்றுபோவது மட்டுமே இதயச் செயல் இழப்பு ஆகாது. மார்புக் கூட்டின் உள்ளே பாதுகாப்பாகத் துடித்துக்கொண்டு இருக்கும் இதயத்தில் ஏற்படும் அதீத மின் உற்பத்தி அல்லது மின் தடங்கலும்கூட இதயச் செயல்பாட்டை நிறுத்தி உயிரைப் பலிவாங்கிவிடும்.

தாயின் கருவறையில் மூன்று வாரக் குழந்தையாக இருக்கும்போதே, இதயம் துடிக்க ஆரம்பித்துவிடுகிறது. அது தானாகத் துடிப்பது இல்லை. இதயம் இயங்கவும் ஓர் ஆற்றல் தேவைப்படுகிறது. இதயத்தை இயங்கவைக்கும் அந்த மின் உற்பத்தி நிலையம் இதயத்தின் மேல் பகுதியில் வலது அறையில் இருக்கிறது. இதற்குப் பெயர் 'சைனஸ் நோட்’. இங்கிருந்துதான் இயற்கையான மின் இணைப்புகள் வழியாக இதயத்தின் மற்ற அறைகளுக்கும் மின்சாரம் பாய்கிறது. இந்த மின் உற்பத்தி மற்றும் மின் விநியோகத்தில் எங்கேனும் பாதிப்பு ஏற்பட்டால், இதயத் துடிப்பிலும் மாறுபாடு ஏற்படும். ஒன்று அதிவேகமாகத் துடிக்கும், அல்லது தேவைக்கும் குறைவாகத் துடிக்கும். இதயம் இப்படிச் சீரற்றுத் துடிப்பதைத்தான் சீரற்ற இதயத் துடிப்பு நோய் என்கிறார்கள்.

இதயம் வேகமாகத் துடிப்பதால் என்ன பிரச்னை வரும்?

ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் (Atrial fibrillation) என்று சொல்லக்கூடிய இதயத்தின் மேல் அறையில் இருந்து வரும் சீரற்ற அதிவேக மின் உற்பத்திதான் வேகத் துடிப்புப் பிரச்னைக்கு முக்கிய காரணம். 40 வயதுக்கு மேல் நான்கில் ஒருவருக்கு இந்தப் பிரச்னை வர வாய்ப்பு உள்ளது. பொதுவாக, வயது, உயர்ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொழுப்பு, புகைப் பழக்கம், அதிக மது அருந்துதல், தைராய்டு, நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் காரணமாக வேகத் துடிப்புப் பிரச்னை ஏற்படும். அதிவேகமாக இதயம் துடிக்கும்போது, இதயத்தில் இருந்து ரத்தம் பம்ப் செய்து வெளியேற்றப்படுவதில் ஏற்படும் சிக்கல் காரணமாக ரத்தம் உறைந்துவிடும். இப்படிக் கெட்டியான ரத்தம் மூளைக்குச் செல்லும்போது அடைப்பு ஏற்படுவதால், பக்கவாதம் வரலாம். எனவே, இதனை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை பெறுவது முக்கியம்.

இதயம் வேகமாகத் துடிப்பது ஏன்?

இதயத்தில் நடைபெறும் மின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஏற்படும் சீரற்றத்தன்மை காரணமாகவே இதயம் வேகமாகத் துடிக்கிறது. இதில் இரு வகைகள் உண்டு. இதயத்தின் மேல் அறையில் தோன்றும் வேகத் துடிப்பால் உயிருக்கு ஆபத்து எதுவும் கிடையாது. அதுவே, கீழ் அறையில் இருந்து தோன்றினால், உயிருக்கு ஆபத்து நேரலாம். இந்தப் பிரச்னை சிலருக்குப் பிறவியிலேயே இருக்கும். அதன் பாதிப்பு வாழ்நாளில் எந்த நேரத்திலும் வெளிப்படலாம். படபடப்பு, சோர்வு, மூச்சு வாங்குதல், நெஞ்சு வலி போன்றவை இதன் அறிகுறிகள்.

இதனைக் கண்டறிவது எப்படி?

இந்தப் பிரச்னைக்கான அறிகுறிகள் தோன்றும்போது, ஈ.சி.ஜி. பரிசோதனை மூலம் கண்டறிந்துவிடலாம். முடியாதபட்சத்தில், 24 மணி நேரக் கண்காணிப்பு கருவி மூலம் கண்டறியலாம். இந்தக் கருவியைச் சட்டைக்கு உள்ளே வைத்துக்கொண்டு வேலை செய்யலாம். 24 மணி நேரத்துக்குப் பிறகு அதில் உள்ள 'சிப்’பில் இருந்து தகவலைப் பதிவிறக்கம் செய்து, இதயத் துடிப்பின் போக்கைத் தெரிந்துகொள்ள முடியும். இதுதவிர, 'ஈவென்ட் ரெக்கார்டர்’ என்று ஒரு கருவி உள்ளது.

இரண்டு வாரங்கள் வரையிலும் இதில் தகவல்கள் பதிவாகிக்கொண்டு இருக்கும். வேகத் துடிப்பு அறிகுறி தோன்றுகிறபோது ஈவென்ட் ரெக்கார்டரை ஸ்விட்ச் ஆன் செய்தால், இதயத் துடிப்பு விவரங்களை அது பதிவுசெய்துவிடும். இந்தப் பதிவுத் தகவல்களை செல்போன் தொழில்நுட்பத்தின்படி எங்கு இருந்து வேண்டுமானாலும் டாக்டருக்கு அனுப்பிப் பார்க்கச் செய்யலாம். இவை யாவும் முடியாத பட்சத்தில் 'எலக்ட்ரோ ஃபிசியாலஜி ஸ்டடி’ என்ற பரிசோதனையின் மூலமாகவும் பிரச்னை என்ன என்பதைக் கண்டறிய முடியும். உடலுக்குள் குழாயைச் செலுத்தி, செயற்கை முறையில் இதயத்தில் மின் தூண்டலை உருவாக்கி, அப்போது அதன் செயல்பாட்டைக் கண்காணித்து, பிரச்னையைக் கண்டறியும் முறை இது.

இதற்குச் சிகிச்சை என்ன?

இந்தப் பிரச்னைக்கு மாத்திரை - மருந்துகளின் மூலமும் ரேடியோ ஃப்ரீக்வெவன்ஸி அபலேஷன் என்ற முறையின் மூலமாகவும் இரண்டு வகையான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. அதிவேக இதயத் துடிப்பு உள்ளவர்களில் 50 சதவீதம் பேருக்குத்தான் மருந்து - மாத்திரைகளால், பிரச்னையைக் கட்டுப்படுத்த முடியும். அப்படியே கட்டுப் பட்டாலும், அவர்கள் வாழ்நாள் முழுக்க மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி எடுத்துக்கொண்டாலும், மருந்தின் பக்க விளைவுகளை அனுபவிக்க நேரிடும். பல ஆண்டுகளுக்கு தொடர்ந்து மருந்து சாப்பிடச் சொல்வது சரியான ஆலோச னையாக இருக்காது. எனவே, தேவைக்கு அதிகமாக மின் தூண்டல் உள்ள இடங்களை ரேடியோ ஃப்ரீக்வென்ஸி மூலம் அழிக்கும் சிகிச்சையைப் பரிந்துரைப்போம்.

இதயம் குறைவாக துடிக்கும் பிரச்னை எதனால் வருகிறது? அதன் அறிகுறிகள் என்ன?

இதயம் தேவைக்கும் குறைவாக துடிப்பதற்கு வயது அதிகரிப்பது காரணமாக இருக்கலாம்; பிறந்ததில் இருந்தும் இருக்கலாம். நினைவு இழந்து மயக்கம்போட்டு விழுவது, மூளைக்குப் போதுமான ஆக்சிஜன் கிடைக்காததால் ஏற்படும் கிறுகிறுப்பான மயக்கம், சோர்வு, மூச்சுவாங்குதல் போன்றவை இதன் அறிகுறிகள். இதற்கு மருந்து மாத்திரையால் பலன் இல்லை. 'பேஸ்மேக்கர்’தான் ஒரே தீர்வு

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum