Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords


மாற்றுரைவதீஸ்வரர் திருக்கோவில்

View previous topic View next topic Go down

மாற்றுரைவதீஸ்வரர் திருக்கோவில்

Post  ishwarya on Wed May 22, 2013 6:03 pm

திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலும், திருச்சி-விழுப்புரம் ரெயில் பாதையில் உத்தமர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து மேற்கில் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது மாற்றுரைவதீஸ்வரர் கோவில்.

கிழக்கு நோக்கியபடி காணப்படும் இந்த கோவிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளை கொண்டுள்ளது. இரண்டாம் பிரகாரத்தின் தென்பகுதியில் அம்மன் சன்னதியும், அதற்கு எதிரில் அன்னமாம் பொய்கை என்ற சிவதீர்த்தமும் உள்ளன.

தலவிருட்சம் வன்னி மரமாகும். தென்மேற்கு மூலையில் செல்வ விநாயகர் சன்னதி இருக்கிறது. முதல் ராஜகோபுரத்திற்கும், இரண்டாம் கோபுரத்திற்கும் இடையில் கொடி மரமும், பலிபீடமும், இடப தேவரும், அவற்றை அடுத்து வடபால் நவக்கிரக சன்னதியும், சகஸ்ரலிங்கமும் காட்சியளிக்கின்றன

சுயம்பு லிங்கம்......... முதல் பிரகாரத்தின் முன்னர் இறைவன் சுந்தரமூர்த்தி சுவாமிக்கு பொற்கிழி அளித்த வாசலையுடைய தபன மண்டபத்தின் தென்புறத்தில் விநாயகரும், வடபுறத்தில் நடராஜரும் உள்ளனர். இதையடுத்து இடப தேவர் உள்ள மகா மண்டபமும், அதற்கு அடுத்து அர்த்த மண்டபமும், அதனையடுத்து மூலஸ்தானமும் உள்ளன.

கருவறையில் சுவாமி ருத்ராட்ச பந்தலின் கீழ் சுயம்பு லிங்கமாக அருளுகிறார். சிவதல யாத்திரை சென்ற சுந்தரர், தன்னுடன் வரும் சிவனடியார்களுக்காக சிவனிடம் பொன் பெற்று அதன் மூலம் அவர்களுக்கு உணவு படைப்பது வழக்கம் ஆகும்.

ஒரு சமயம் அவர் திருவானைக்கா கோவிலில் இறைவனை தரிசித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு திருப்பாச்சிலாச்சி ராமம் என்னும் இத்தலத்தை அடைந்தார். திருக்கோபுரத்தை தரிசித்து திருக்கோவிலை வலம் வந்து உள்ளே சென்று எம்பெருமான் முன்பு நின்று பொன்பெற விரும்பி பதிகம் பாடினார்.

பொன் அளித்த சிவன்........ தனது பக்தனை சோதிக்க விரும்பிய சிவபெருமான், சுந்தரர் கேட்ட பொன் தராமல் அமைதியாக இருந்தார். பொறுமையுடன் இருந்த சுந்தரர் சற்று நேரத்தில் கோபம் கொண்டார். சிவன் என்பவர் இருக்கிறாரா? இல்லையா? என்ற அர்த்தத்தில் அவரை இகழ்ந்து பதிகமும் பாடினார்.

அதற்கு மேலும் சுந்தரரை சோதிக்க விரும்பாத சிவபெருமான், சுந்தரருக்கு ஒரு பொற்கிழியினை பரிசாக வழங்கினார். அதனை பெற்றுக்கொண்ட சுந்தரர், சிவபெருமானை வணங்கி அங்கிருந்து திருப்பைஞ்சீலி முதலிய தலங்களை தரிசித்து விட்டு திருஈங்கோய்மலையை அடைந்தார். ஈங்கோய் மலையின் மீது எழுந்தருளியுள்ள ஸ்ரீமரகதாசல நாதரை தரிசித்து பொன் வேண்டினார்.

அப்போது இறைவன் திருவருளால் அத்தலத்து விருட்சமாகிய புளிய மரத்தின் காய்கள் எல்லாம் பொன்னாகி கீழே உதிர்ந்தன. உடனே சுந்தரர், பொற் புளியங்காய்களை எல்லாம் மகிழ்வுடன் வாரி எடுத்துக் கொண்டு மீண்டும் திருப்பாச்சிலாச்சிராமத்தை அடைந்தார்.

பொன் தரமானதா? ஸ்ரீமரகதாசல நாதர் தனக்கு கொடுத்த பொன் தரமானது தானா? என்று சுந்தரருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனால் தனக்கு வழங்கப்பட்ட பொன்னையே சுந்தரர் உற்றுப்பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது இரண்டு பேர் அங்கு வந்தனர். அவர்கள் இருவரும் சுந்தரரிடம் பொன்னை பார்த்துக் கொண்டு இருந்த காரணத்தை கேட்டனர்.

அதற்கு சுந்தரர், தனக்கு சிவபெருமான் வழங்கிய பொன் சுத்தமானதுதானா? என்று பார்த்துக் கொண்டு இருப்பதாக கூறினார். அதைக்கேட்டதும் இரண்டுபேரில் ஒருவர், சுந்தரரிடம் இருந்த பொன்னை வாங்கி அதனை உரைத்து காட்டி அந்த பொன் தரமானதுதான் என்று உறுதியளித்தார். அதை அங்கிருந்த மற்றவரும் ஒப்புக்கொண்டார். சிறிது நேரத்தில் இருவரும் அங்கிருந்து மறைந்து விட்டனர்.

சிறிது நேரத்தில் அவருக்கு காட்சி அளித்த சிவபெருமான், இங்கு வந்த இரண்டு பேரில் ஒருவர் தான் என்றும், தன்னுடன் வந்தவர் மகாவிஷ்ணு என்றும், தங்கத்தை உரைத்துக்காட்டியது தான்தான் என்றும் கூறினார் என்பது இத்தலத்து வரலாறு.

பிரம்மதேவன் வழிபட்ட தலம்........... ஒரு கர்ப்பத்தில் பிரம்மதேவன் பல உயிர்களை படைத்தான். அப்போது உலகில் உள்ள அழகுகளையெல்லாம் ஒன்றாக திரட்டி திலோத்தமை என்னும் தேவமாதை படைத்தான். அத்திலோத்தமையின் வடிவழகை கண்டு அவள் மீது மையல் கொண்டு அவளை கைப்பற்ற ஓடினான்.

நம் தந்தை மனம் மாறுபட்டு அடாத செயலை செய்ய முற்படுகின்றாரே என்று அவளும் ஓடி மறைந்தாள். இதனால் சிருஷ்டி தொழில் பிரம்ம தேவனுக்கு தாமதம் ஆயிற்று. பெண்ணை காமுற்ற குற்றமும் நேர்ந்தது. இதற்கு பரிகாரம் வேண்டி பிரம்மன், பிரகஸ்பதியை அணுகி நடந்தவற்றை தெரிவித்தான். அதைக்கேட்ட அவர், நீ ஒரு சிறந்த தலத்தில் இருந்து சிவனை பூஜித்தால் இக்குற்றங்கள் தாமே விலகும் என்று கூறினார்.

உடனே பிரம்மன் சோழ நாட்டு காவிரியின் வடகரையில் உள்ள திருப்பாச்சிலாச்சிராமம் எனும் இந்த சிவத்தலத்தை அடைந்து அன்னமாம் பொய்கையில் நீராடி நீலகண்ட பெருமானை நாள்தோறும் பூஜித்து வழிபட்டு தவம் செய்து வந் தான். ஒருநாள் சிவபெருமான், பிரம்மதேவனின் பூஜைக்கும் தவத்திற்கும் மகிழ்ந்து இடபாரூடராய் எழுந்தருளி காட்சி அளித்தார்.

அந்த காட்சியினை பிரம்மதேவன் தரிசித்து வணங்கி நின்று, 'அண்ணலே அடியேனது குற்றத்தை போக்கி படைப்பு தொழிலை மீண்டும் எனக்கு அருள வேண்டும்' என்று பலவாறு பிரார்த்தித்தான். உடனே சிவபெருமான், பிரம்மனுக்கு அருள் செய்து மறைந்தருளினார்.

பிரம்மனும் தன் உலகுக்கு சென்று தனது தொழிலில் நின்றான் என்பது வரலாறு. இத்தலத்தில் பிரம்மதேவன் இறைவனை பூஜித்ததால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன், பிரம்மபுரீஸ்வரர் என திருநாமம் பெறலானார். இந்த கோவிலுக்கு சென்று வழிபடுபவர்களுக்கு மன மகிழ்ச்சியும், மன சாந்தியும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

துவாரபாலகிகளுக்கு வழிபாடு......... இக்கோவிலில் உள்ள அம்பாள் பாலாம்பிகை இத்தலத் தில் கமலன் எனும் வணிகனின் மகளாக பிறந்தாள். வன்னிமரத்தின் அடியில் சுவாமியை வேண்டி தவம் இருந்து தகுந்த காலத்தில் அவரை மணந்து கொண்டாள். இவர் பிரகாரத்தில் தனி சன்னதியில் தாமரை மலர் மீது நின்ற கோலத்தில் மேற்கு பார்த்தபடி இருக்கிறார்.

இவரது சன்னதியில் வித்தியாசமாக துவாரபாலகிகளுக்கு பெண்கள் மஞ்சள் கயிறு, தொட்டில் கட்டி வழிபடுகின்றனர். இவர்கள் மூலமாக அம்பாள், பக்தர்களின் கோரிக்கை களை ஏற்றுக்கொள்கிறார் என்பது நம்பிக்கை. அர்த்தஜாம பூஜையில் மட்டும் முதலில் அம்பாளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு அதன்பிறகு சுவாமிக்கு பூஜைகள் நடக்கிறது.

குழந்தை பிறந்தவர்களும், பாலதோஷம் உள்ள குழந்தைகளின் பெற்றோரும் அம்பாளுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். இவ்வாறு செய்வதால் குழந்தைகள் வாழ்வில் நோய்கள் இல்லாமல் சிறப் பாக வாழ்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அம்பாள் மிகுந்த சக்தி வாய்ந்தவர். இங்குள்ள இறைவனையும், இறைவியையும் காலை, நடுப்பகல், மாலை தரிசித்தால் மிகுந்த பயன் அளிக்கும்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum